Police Department News

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்!! வழிப்பறி கும்பல்கள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்!! வழிப்பறி கும்பல்கள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் உப்பளம், விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா வியாபாரிகள் இந்தப் பகுதியில் குவிந்து வருகின்றனர்
முள்ளக்காடு ஊரின் பல பகுதிகளில் சரி வர தெரு மின்விளக்குகள் எரியாத காரணத்தினால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கஞ்சா பிரியர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கஞ்சா விநியோகம் கனஜோராக நடைபெற்று, பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற உறுதுணையாக இருந்து வருகிறது.
குறிப்பாக, சாண்டி கல்லூரி செல்லும் பிரதான சாலை முழுவதும் கஞ்சா வியாபாரமும், அதே சமயத்தில் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களை கஞ்சா போதையில் இளைஞர்கள் வழிமறித்து வழிபறி செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தப் பகுதியில் துணிகரமாக கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இச்சாலையில் மின்விளக்குகள் சரிவர எரியாததாலும், அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சமூக விரோத சம்பவங்கள் நடக்கும் கூடாரமாக இருந்து வருகிறது.
மேலும், சாண்டி கல்லூரி சாலை மற்றும் பொட்டல் காட்டிற்கு செல்லும் சாலைகளில் நடைபெறும் வழிபறிச் சம்பவங்களினால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இவ்வழியே பயணிக்கவே மிகுந்த அச்சப்படுவதாகவும், இரவு நேர பயணத்தை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
இப்பகுதியில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் குறித்து, காவல்துறையிடம் புகார் தெரிவித்தால், தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என ஒருவித அச்சத்தில் பொதுமக்கள் யாரும் புகார் தெரிவிக்காமல், நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருந்து வருகின்றனராம்.
காரணம் இதே வழியில் மீண்டும் நாம் செல்லும்போது இந்த கும்பல்கள் மூலம் ஆபத்து ஏற்படும் என பலர் அஞ்சுகின்றனர்
போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து நடக்கும் இந்த கஞ்சா விநியோகத்தை தடுத்து, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா நடமாட்டத்தை வேரோடு களைய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகளும், வழிப்பறி கும்பல்களும் கலக்கத்தில் இருந்து வரும் நேரத்தில், முள்ளக்காடு பகுதியில் மட்டும் சமூக விரோத சம்பவங்கள் தடையின்றி நடப்பது ஆச்சரியம் தெரிவிக்கின்றனர் அப்பகுதியினர். முத்தையாபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர் மேலும் இந்த பகுதிகளில் சமூக விரோதிகளை கண்டு பிடிக்க மாறுவேடத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டால் இந்த கும்பலின் அடாவடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பொதுமக்கள். காவல் துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி இருப்பதால், மாணவர்கள் அதிகளவில் நடந்தே முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்திற்கு செல்வது வழக்கம். இச்சாலையில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அதிக துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கல்லூரி சாலைகள் அனைத்தும் கஞ்சா சாலையாக மாறிய வருவதை கண்டு வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கஞ்சா வியாபாரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அச்சமின்றி இரவு நேரங்களில் பயணிக்க வழிவகுப்பார் என நம்புகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published.