கூலித்தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Police Department News

கூலித்தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

சென்னை: புளியந்தோப்பு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிமாறன் (21) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் பட்டாளம் நோக்கி சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க புளியந்தோப்பு துணை ஆணையர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் திரு.விஜய்ஆனந்த் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தாம்பரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26), புரசைவாக்கத்தை சேர்ந்த மார்ட்டின் ஜோஸ்வா தீமோத்தி (23), அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்கிற பாலாஜி (21) ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்போன்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஓட்டேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொளத்தூரை அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாநகர பஸ் கண்டக்டர் நித்யகல்யாணம் (56), குப்பை லாரி மோதி பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவர் செல்வம் (44) கைது செய்யப்பட்டார்.

குண்டும், குழியுமாக உள்ள வேளச்சேரி மெயின்ரோட்டை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புழல் ரெட்டேரியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சுமன் (25) என்பவரை 4 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். சுமன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

வேளச்சேரி சீத்தாபதி நகரை சேர்ந்த ஆம்னி பஸ் அதிபர் தமிழன் என்பவரது வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.2 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க வருமாறு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த பணம் முக்கிய புள்ளிகளின் பணமா? என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு தாம்பரம் அம்பேத்கர் தெரு சந்திப்பு அருகே சாலையில் சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் (41), அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

சாலிகிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அவரது நண்பர்கள் 2 பேரிடம் சென்று மாணவியின் தம்பி தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் 2 பேரும் தாக்கியதில், மாணவியின் தம்பி காயம் அடைந்தார்.

மாதவரம் ஜவகர்லால் சாலை அருகே உள்ள தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடியதாக, கிருபாகரன் (33), மஞ்சுநாதன் (28) உள்பட 13 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கிளப் உரிமையாளர்கள் ரமேஷ், சுரேஷ், பாலகிருஷ்ணா ஆகியோரை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து அப்புறப்படுத்தியதால் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகியான சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலச்சந்தரை, மர்மநபர்கள் 3 பேர் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

மெரினா கலங்கரை விளக்கம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்யாவை, சட்டக்கல்லூரி மாணவர் நித்யானந்தம் என்பவர் தாக்கினார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

கோவில் விழாவையொட்டி, திருவான்மியூரில் இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து தூக்கத்தை கெடுத்து விடுகின்றனர். காவலில் புகார் அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்று நடிகர் அரவிந்தசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published.