Police Recruitment

ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம்

ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சர்ச் தெரு மற்றும் ஏழு தெரு உள்ளன. இந்த தெருக்களில், வெவ்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்தப் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏழு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு வந்து மது பாட்டில்களை தட்டிவிட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து இரண்டு தரப்பினருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் சர்ச் தெருவைச் சேர்ந்த ஏசு, மணிகண்டன், மணி உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதனையறிந்த சர்ச் தெருவில் வசிக்கும் மக்கள், தங்களது பகுதிக்குள் வந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை எச்சரித்தனர். இதனால் அந்த தரப்பினர் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் காரில் வந்தார். போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரை திடீரென்று மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். தங்களது பகுதியில் நுழைந்து தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ராஜபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published.