பாட்டு பாடுனா கூட தவறு.. சாதாரணமா நினைக்கிற விஷயம் கூட பெரிய விதிமீறல்.. சென்னை போலீஸ் எச்சரிக்கை!
பொதுவெளியில் செய்ய கூடாத விஷயங்கள் என்று சென்னை போலீசார் சில பட்டியலை வெளியிட்டுள்ளனர். தண்டனைக்குரிய குற்றங்கள் என்று கூறி முக்கியமான லிஸ்ட் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு என்று மட்டுமின்றி இந்தியா முழுக்க மாநிலம் மாநிலத்திற்கு விதிகள் மாறுபடும். முக்கியமாக பெருநகரங்களில் விதிகள் கடுமையாக மாறுபடும். பெங்களூரில் இருக்கும் பல விதிகள் சென்னையில் இருக்காது. சென்னையில் இருக்கும் பல விதிகள் பெங்களூரில் இருக்காது.
முக்கியமாக காலங்கள் மாற மாற.. புதிய பிரச்சனைகள் ஏற்பட ஏற்பட புதிய விதிகளும் கொண்டு வரப்படும். முக்கியமாக பெண்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து, பல விதிமுறைகள் சென்னையில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
சென்னை விதிகள்: அந்த வகையில் பொதுவெளியில் செய்ய கூடாது விஷயங்கள் என்று சென்னை போலீசார் சில பட்டியலை வெளியிட்டுள்ளனர். பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம் என்று சென்னை போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், பாட்டு போட்டா தப்பா? பொதுவெளியில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது, ஒலிக்கச் செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றம். மூன்று மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். கவனமாக இருங்கள் என்று சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விதிகள்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை வருகிற 4 ஆம் தேதி முதல் நிர்ணயித்த போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வரம்பு என்ன: அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்!
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளன.