Police Recruitment

ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ஒரே நாளில் 3 இடங்களில் வேட்டை: பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் திம்மாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் வந்த பெண் அணிந்திருந்த தாலி செயினை மர்ம நபர்கள் கடந்த 31-ந்தேதி பறித்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் தனியாக சென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

மேலும் வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் குறித்து ஒரே நாளில் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மேற்பார்வையில் காவேரிபட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறப்பு புலனாய்வு நடத்தி தேடி வந்தனர்.

அப்போது பெண்களிடம் நகையை பறித்துக் சென்றவர்கள் சூளகிரி பகுதியைச் சேர்ந்த முனீர் (வயது23), வசீம் (25) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை பிடித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் 15 நாட்களுக்குள் காவல்துறையினர் துரித மாக செயல்பட்டு பிடித்தால் நகையை பறிகொடுத்தவர்கள் நிம்மதி அடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published.