தமிழகம் முழுவதும் போலீஸ் எழுத்து தேர்வுக்கு குவிந்த வாலிபர்கள்-இளம்பெண்கள்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வை பல்லாயிரக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 780 பெண்களுக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை ஆண் காவலர் பணியிடங்களில் 1819 ஆண்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களில் ஆண்களுக்கு 83 இடங்களும் பெண்களுக்கு 3 இடங்களும், தீயணைப்பாளர் பணியிடங்களில் 674 ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 10-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினார்கள்.
சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் காவலர் பணிக்கான தேர்வை எழுதினார்கள். இதில் 9,868 பேர் ஆண்கள், 2435 பேர் பெண்கள் ஆவர்.
செல்போன், டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள் ளிட்ட எலக்ட்ரானிக் உப கரணங்களை தேர்வர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்களை போலீசார் அனுமதித்தனர்.
இந்த தேர்வானது காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் 8.30 மணிக்கு தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதன்படி காலையிலேயே தேர்வு மையங்கள் முன்பு வாலிபர்களும் இளம்பெண்களும் கூடியிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற காவலர் தேர்வில் 7,042 பேர் பங்கேற்றனர். திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி, காக்களூரில் உள்ள சி.சி.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆர்.எம்.கே.கல்லூரி, வேலம்மாள் பள்ளி டி.ஜெ.எஸ்.கல்லூரியிலும் தேர்வு நடைபெற்றது.
இதில் பெண்கள் 1,311 பேரும், ஆண்கள் 5,731 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.