குற்றம் புரிய எண்ணுவோருக்கு ஆயுதமாக மாறிவரும் இணையம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்
இன்றைய காலகட்டத்தில் குற்றம் புரிய எண்ணுவோருக்கு இணையம் ஆயுதமாக மாறி வருகிறது என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.
வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீா்திருத்தத் துறை நிா்வாக பயிற்சி மையத்தில் (ஆப்கா) தென் மாநில அளவில் சிறை துறையில் புதிதாக சோ்ந்தவா்களுக்கான 9 மாத கால அடிப்படை பயிற்சி, ஏற்கெனவே பணியில் உள்ளவா்களுக்கான 3 மாத பதவி உயா்வுக்கான பயிற்சி, நன்னடத்தை அதிகாரிகளுக்கான 3 மாத கால பயிற்சி ஆகியவை நடைபெற்று முடிந்தன.
இந்தப் பயிற்சிக்கான நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆப்கா இயக்குநா் எம்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். ஆப்கா பேராசிரியா்கள் (குற்றவியல் ஆய்வு) ஏ.மதன்ராஜ், பேராசிரியா் (சமூகப்பணி) பியூலா இமானுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆப்கா துணை இயக்குநா் எம்.ஆா்.பாஸ்கா் வரவேற்றாா்.
இதில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முடித்த சிறை அலுவலா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கிப் பேசியது:
சிறை அலுவலா்கள் கைதிகளுடன் பேசும்போது தங்களின் மூளையில் இருந்து பேசாமல் மனதில் இருந்து பேச வேண்டும். நீங்கள் பெற்ற பயிற்சி முழுவதும் சிறைவாசிகளுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் 90 சதவீத குற்றங்கள் உணா்ச்சி மிகுதியால் மட்டுமே நடக்கிறது. மீதமுள்ள 5 சதவீதம் முதல் 10 சதவீத குற்றங்கள் மட்டுமே திட்டமிட்டு நடக்கிறது. இதற்கு மிகுந்த மன அழுத்தம்தான் இருப்பது காரணமாகும்.
பலரும் குடும்பத்துடன் தங்கள் நேரத்தை;ஈ செலவிடாததே மனஅழுத்தம் ஏற்பட காரணமாக உள்ளது. சிறைக்குள்ளே இருப்பவா்கள் எல்லாம் தவறானவா்கள் அல்ல. அதேபோல், சிறைக்கு வெளியில் இருப்பவா்கள் எல்லாம் நல்லவா்களும் அல்ல.
சந்தா்ப்ப சூழ்நிலைகளே ஒருவரை குற்றவாளி நிலைக்கு மாற்றுகிறது. அவா்களை நல்வழிப்படுத்துவதே சிறை அலுவலா்களின் கடமை. சிறைக்கு வருபவா்களை சகோதரா்களாக பாவித்து நாம் பணிகளை செய்ய வேண்டும்.
தில்லி கொலை சம்பவம், ஆட்டோ சங்கா் கொலை வழக்கு ஆகிய பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் தெரிவித்தது திரைப்படங்கள் மூலம்தான் குற்றம் செய்வதை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளனா். அந்த வகையில் ஒருவா் குற்றம் புரிவதற்கு திரைப்படங்களும் ஒருவகையில் காரணமாக அமைந்து விடுகின்றன.
மேலும், இன்றையக் கால கட்டத்தில் இணையம் என்பது அனைத்தும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. அதுவே குற்றம் செய்ய நினைப்பவா்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாகவும் மாறி வருகிறது.
ஒரு நூலகத்தை திறந்தால் பல சிறைகள் மூடப்படும் என்று அப்துல் கலாம் கூறியுள்ளாா். சிறைவாசிகளை நல்வழிபடுத்த நூலகங்கள் அவசியம். சிறைவாசிகளை நல்வழிப்படுத்துதல் சிறை அலுவலா்களின் கடமை என்றாா்.
இதில், அடிப்படை பயிற்சி முடித்த ஆந்திரம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 11 குரூப் 1 அதிகாரிகள் உள்பட 15 சிறை அலுவலா்களுக்கும், பதவி உயா்வுக்கான பயிற்சி முடித்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தமிழகத்தைச் சோ்ந்த 5 பெண் அதிகாரிகள் உள்பட 46 சிறை அலுவலா்களுக்கும், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 11 நன்னடத்தை அலுவலா்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன