Police Department News

23 கொலைகள்; 271 பேர் விபத்தில் பலி; ரௌடிகள் லிஸ்ட்டில் 564 பேர்! – 2023 வேலூர் க்ரைம் ரிப்போர்ட்

23 கொலைகள்; 271 பேர் விபத்தில் பலி; ரௌடிகள் லிஸ்ட்டில் 564 பேர்! – 2023 வேலூர் க்ரைம் ரிப்போர்ட்

2023-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில் மட்டும் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ‘க்ரைம்’ ரிப்போர்ட்டை நீட்டுகிறது, அந்த மாவட்டக் காவல்துறை.

ஆண்டு தொடக்கத்திலிருந்து இறுதி வரை 23 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பதிவான 23 கொலை வழக்குகளிலும் தொடர்புடைய 41 எதிரிகளும் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை வாங்கித் தரப்பட்டிருக்கிறது.

மேலும், 14 கொலைக் குற்றவாளிகள் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, 23 பேர்மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்திருக்கிறது.

1 ஆதாயக் கொலையும், 1 கூட்டுக்கொள்ளை வழக்கும்கூட பதிவாகியுள்ளது.

5 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ஒரு பாலியல் வழக்கில், குற்றத் தடுப்பு ஆணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கேங்ஸ்டர்கள்:

இளம் சிறார், சிறுமிகள் மீதான 69 பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் 72 குற்றவாளிகள் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில், 2 குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 18 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

44 சாராய மாஃபியாக்கள், 35 ரௌடிகள், 24 கொள்ளையர்கள், 3 மணல் மாஃபியாக்கள் உட்பட 119 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

பழைய குற்றவாளிகள் 455 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 354 ரௌடிகள், 210 கேடிகள் என மொத்தம் 564 பேர் ஹெச்.எஸ் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் புதிதாக முளைத்த 14 கேங்ஸ்டர்கள் மீதும் சரித்திரப் பதிவேடு தொடங்கப்பட்டு, அவர்களும் 24 மணிநேர கண்காணிப்புக்குள் வந்திருக்கிறார்கள்.

இந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளில் 101பேர் பல்வேறு வழக்குகளில், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

271 பேர் விபத்தில் மரணம்:

மாவட்டம் முழுவதும் 384 பேரைக் காணவில்லை எனப் புகார்கள் வந்தன.

அவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 325 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாவட்டம் முழுவதும் நடந்த வாகன விபத்துகளில் 271 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 979 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துகளைக் குறைக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டப்படி 1,82,777 சிறு, குறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அந்த வழக்குகளில் வசூலிக்கப்பட்ட 18,39,67,600 ரூபாய் பணம் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து விதிகளைமீறிய 671 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 418 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பொது இடத்தில் மது அருந்தி இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக 2,155 நபர்கள்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட 5 ஜே.சி.பி இயந்திரங்கள், 30 லாரிகள், 53 டிராக்டர்கள் உட்பட 351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

குட்கா… கஞ்சா…

லாட்டரி சீட்டு விற்பனைச் செய்த 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூதாடிய வழக்குகளில் 501 பேர் கைதுசெய்யப்பட்டனர். குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனைச் செய்தது தொடர்பாக 941பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 764 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

அதோடு, இந்த வழக்குகளில் தொடர்புடைய ரூ.7.84 லட்சம் மதிப்பிலான 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுவிலக்கு வழக்குகளில் 2,772 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, கஞ்சா வியாபாரிகள் 225 பேரும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கஞ்சா விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, கஞ்சா வியாபாரிகள் 11 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

செல் டிராக்கர்:

வழக்குகளில் சிக்கிய 360 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் 14,45,146 ரூபாய் கிடைத்தது.

இந்தத் தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 234 குற்ற வழக்குகளில், ரூ.1.84 கோடி மதிப்பிலான சொத்துகள் களவுபோயிருக்கின்றன.

அவற்றில், ரூ.1.30 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

குற்றங்களை தடுக்கும் வகையில் 1,264 சி.சி.டி.வி கேமராக்களைக் கொண்டு எஸ்.பி அலுவலகத்திலுள்ள கன்ட்ரோல் ரூம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் ‘செல் டிராக்கர்’ என்ற அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே தொலைந்துபோன 522 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நல்ல முறையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது’’ என்று விவரித்து, 2023 க்ரைம் டைரியை மூடிவைத்து… 2024-ம் ஆண்டுக்கான பணியையும் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது, வேலூர் மாவட்டக் காவல்துறை.

Leave a Reply

Your email address will not be published.