திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைதான குற்றவாளி, விசாரணையின்போது தண்டனைக்கு அஞ்சி நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஏ.பி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான் (36). இவர்மீது கடந்த 2023-ல் பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் அவரைக் கைதுசெய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
நேற்று (மார்ச் 19) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, மாவட்ட சிறையிலிருந்த ஷாஜகான் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், நீதிபதி முன்னிலையில் நடந்த விசாரணையில் ஷாஜகானுக்கு எதிராக சாட்சிகள் உறுதி செய்யப்பட்டது. மேலும், வழக்கு (இன்று) முடித்து வைக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதியும் தெரிவித்தார். அப்போது, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஷாஜகான் தண்டனைக்குப் பயந்து நீதிமன்றத்திலிருந்து வெளியில் ஓடிவந்து இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
போலீஸார் ஷாஜகானை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பின்னர், இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் ஷாஜகானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, கை மற்றும் இடுப்பு பகுதிகள் உடைந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஷாஜகான் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.