Police Department News

கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் .

கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் .

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வடக்குப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். லாரி ஓட்டுநரான இவரை கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி முதல் காணவில்லை. வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் பல நாள்களாகியும் வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த விக்னேஷின் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காணாமல்போன விக்னேஷை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசனிடம், அதே பகுதியைச் சேர்ந்தவரும், விக்னேஷின் நண்பருமான சசிகுமார் என்பவர் செவ்வாய் அன்று சரணடைந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த வாக்குமூலத்தில் முன்விரோதம் காரணமாக விக்னேஷை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து புதைத்தாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட விக்னேஷும், சசிகுமாரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சசிகுமார் மீது கஞ்சா, திருட்டு வழக்குகள் உள்ளன. சசிகுமார் கஞ்சா விற்பது தொடர்பாக விக்னேஷ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையறிந்த சசிகுமார், விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது மாமனார் தேவராஜ் மற்றும் நண்பர்களான ஜபருல்லா, மோகன்ராஜ், முத்துகுமார், பிரபாகரன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், விக்னேஷை மது அருந்த அழைத்துள்ளார்.

விக்னேஷுக்கு அதிக அளவு மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளனர். போதை தலைக்கேறியவுடன் சுயநினைவை இழந்த விக்னேஷை அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சசிகுமார், அவரது மாமனார் தேவராஜ் உள்ளிட்டோர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சத்தியமங்கலம் அருகே உள்ள காசிக்காடு என்ற பகுதியில் உள்ள பள்ளத்தின் ஓரமாக புதைத்துள்ளனர். தற்போது, போலீஸார் சசிகுமார் மீது சந்தேகப்பட்டு நெருங்கவே சரணடைந்துள்ளார்” என்றனர்.

இதைத் தொடர்ந்து, சசிகுமாரை கைது செய்த போலீஸார் அவரை அழைத்துச் சென்று விக்னேஷின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தனர். பின்னர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் முன்னிலையில் விக்னேஷின் சடலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சசிகுமாரின் மாமனார் தேவராஜ், ஜபருல்லா, மோகன்ராஜ், முத்துக்குமார், பிரபாகரன் மற்றும் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.