தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் அரசு விரைவு பேருந்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நேற்று எலவனாசூர்கோட்டை – ஆசனூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை உதவி இயக்குனர் முரளி தலைமையிலான குழுவினர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்தின் ஒரு பகுதியில் இருந்த 2 பைக்குகளை எடுத்து சோதனை செய்ததில் அந்தப் பைகளில் 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
இதில் அந்த பேருந்தில் சென்ற பெரம்பலூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (27), கம்பம் அருகே மணிநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (27) ஆகிய இருவரும் கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களுடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அரசு விரைவு பேருந்தில் 13 கிலோ கஞ்சா கடத்தி சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.