Police Recruitment

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?

பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல, காவல் நிலையத்தில் மட்டும்தான் புகாரை கொடுக்க வேண்டும் என்று சட்டமும் விதியும் சொல்லவில்லை.
இருப்பினும் காவல் துறையில் புகாரை பதிவு செய்வது எப்படி என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

காவல்நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கு எழுதினாலும் சட்டப்பிரிவு போட்டு எழுதினால் நீங்க என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதை சட்ட விளக்கத்தோடு புரிந்து கொண்டு மனுவை பெறுகிறவர்கள் அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பிரிவை குறிப்பிட்டு எழுதுவது. இது சட்டப்படி முறையானதும் கூட.

காவல்துறையில் புகார் கொடுக்கும் போது கு.வி.மு.வி. 154 ன் கீழ் கொடுக்க வேண்டும். மனுவில் என்ன எழுதியிருக்குமோ அதை அப்படியே முதல் தகவல் அறிக்கையாக கு.வி.மு.வி.154 க்கான. படிவத்தில் எழுதுவார்கள்.

காவல் நிலையத்திற்கு கோர்ட்டிலிருந்து கு.வி.மு.வி. 156(3) ன் கீழ் உத்தரவாகி வரும் புகாரை பதிவு செய்யும் போது அப்படியே பதிவு செய்கிறார்கள்.

கு.வி.மு.வி. 154 ன்படி எந்த காவல் நிலையத்திலும் உங்கள் புகாரை கொடுக்கலாம். அதாவது அந்த காவல் நிலையத்திற்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியாதில்லை அதிகார வரம்பு இல்லையென்றாலும் கூட புகாரை பதிவு செய்து அதிகார வரம்புள்ள காவல்நிலைய விசாரணைக்கு அதை மாற்றி விட வேண்டியதும் காவல் நிலை ஆணைகள் 559 ன் படி, புகாரை பதிவு செய்யும் காவல் நிலையத்தின் பொறுப்பாகும். ஆனால் நடைமுறையில் இதை யாரும் கடைபிடிப்பதில்லை.

கு.வி.மு.வி. 154 என்பது கடுமையான குற்றங்களுக்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்கான விதியாகும். இப்படி கொடுக்கப்படும் புகாரை உதவி ஆய்வாளர் நிலைக்குக் குறையாத ஒரு காவல் அலுவலர்தான் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரம் வழங்ப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் பணி நிமித்தமாகவோ அல்லது சொந்தப்பணி காரணமாகவோ விடுப்பில் இருக்கும் போது அவரின் அதிகாரம் பெற்ற வேறு காவல் அலுவலர் புகாரை பதிவு செய்ய வேண்டும். அத்துடன் கு.வி.மு.வி. 154(2) இன்படி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்றை இலவசமாக புகார் கொடுத்த நபருக்குக் கொடுக்க வேண்டும். எதிர் தரப்பினருக்கு கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை ஆனால் இது சரியில்லை.

எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்ற விபரத்தை ஒருவர் தெரிந்து கொள்ள இந்திய சாசன கோட்பாடு 22(1) இன்படி அடிப்படை உரிமை இருக்கும் போது முதல் தகவல் அறிக்கையின் நகலை இலவசமாகவே தந்தாகத்தானே வேண்டும். எது எப்படி இருப்பினும் இது குறித்த விதியை கு.வி.மு.வி யின் 154 ன் கீழேயே சேர்பது கட்டாயமாகும்.

நாம் கொடுக்கும் புகாரை காவல் நிலையத்தில் வாங்க மறுத்தாலோ அல்லது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அங்கு நடந்த சம்பவங்களை எடுத்து கூறி முகப்பு கடிதம் எழுதி கு.வி.மு.வி. 154 (3) இன் கீழ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது நேரில் கொடுக்கலாம்.

இப்படி மனு கொடுத்தால் கொடுக்கப்பட்ட புகார் கைது செய்வதற்கு உரியது என்றால் உடனே அதை அவரோ அல்லது அவர் வேறு காவல் அலுவலரையோ புலனாய்வு செய்ய பணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை அந்த மனுவை காவல் நிலையத்திற்கே மீண்டும் அனுப்படுகிறது.

கைது செய்வதற்கல்லாத புகாரை பதிவு செய்தல்.

புகார் கைது செய்வதற்குறியது அல்ல என்றால் காவல் நிலையத்தில் கு.வி.மு.வி. 155-ன்கீழ் புகாரை பெற்றுக்கொண்டு, புகார் கொடுத்தவரை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என காவல்துறை அறிவுரை கூற வேண்டும் என அந்த விதியே சொல்கிறது.
ஆனால், இது நடைமுறையில் காவல் துறையாலேயே விசாரிக்கப்பட்டு தரப்பினர்களிடம் இனி மேல் இது போன்று நடந்து கொள்ள மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டு புகாரை முடித்து வைப்பார்கள்.
இது வரை இந்த விதியின்படி நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டு யாருக்கும் தண்டனை வழங்கியதாக தெரியவில்லை. இது போன்ற புகார்களை காவல் நிலையங்களில் வாங்க மறுத்தால் அடுத்து என்ன செய்வதென்று சட்ட விதிகள் எதுவுமில்லை.
இது போன்ற சமயங்களில், இவைகளை குறிப்பிட்டு கு.வி.மு.வி. 2 (4)-ன் கீழ் முறையீட்டை வட்டார வரம்புள்ள குற்றவியல் நடுவரிடம் கொடுக்கலாம்.

.

Leave a Reply

Your email address will not be published.