லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் கைது!
சென்னை: லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட, வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையரை போலீசார் கைது செய்தனர்.
மூன்று அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில், 2.74 லட்சம் ரூபாய் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் பாபு; வருவாய் ஆய்வாளர்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர், வீடு கட்ட குவித்து வைத்திருந்த மணலை ஆய்வு செய்துள்ளார்.
ரூ.7,000 லஞ்சம்
அப்போது, ‘சட்ட விரோதமாக மணல் குவித்து வைத்துள்ளீர்கள்; உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பரமக்குடி தாசில்தார் சதீஷ்குமாருக்கு, 7,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்’ எனக் கேட்டுள்ளார்.
இது குறித்து, வீட்டு உரிமையாளர் சேகர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
.எமனேஸ்வரத்தில், நேற்று சேகரிடம் இருந்து, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, ராம்குமார் பாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, எழும்பூர் தாலுகா அலுவலகத்தில், நில அளவையாளராக பணியாற்றி வந்தவர் ஜானகிராமன்.
இவரிடம், எழும்பூரை சேர்ந்த ஒருவர், பட்டா வழங்க பரிந்துரைக்க வேண்டும் என, மனு அளித்துள்ளார்.
அந்த மனுவை பரிந்துரைக்க ஜானகிராமன், லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து, அந்த நபர் ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
எழும்பூரில் நேற்று, புகார்தாரரிடம் இருந்து, ஜானகிராமன், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, போலீசார் கைது செய்தனர்.
மின் வாரியம்வேலுார் மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அங்கு, 48 கிராம் தங்க நாணயங்கள், 22 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கணக்கில் வராத, 1.53 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, மதுரை வணிக வரித்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 4 கிராம் தங்க நாணயம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர்.
சென்னை, கிண்டியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில், துணை இயக்குனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அங்கு, 96 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
மொத்தம், 2.74 லட்சம் ரூபாய் ரொக்கத்தை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.