கோவையில் தங்க நகை பட்டறையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பாதர் ராண்டி தெருவில் ரவிசங்கர் (50) என்பவர் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். நான்கு மாடி கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் நகை பட்டறையும், 2-வது தளத்தில் அலுவலகம், 3-வது தளத்தில் பட்டறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் பகுதியும் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர்.
நகைகளை தயாரிக்கும்போது தங்கத்தை சுத்தம் செய்வதற்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். ரசாயனக் கழிவுகள், தங்கத் துகள்கள் உள்ளிட்டவை கலந்த கழிவுநீரைச் சேகரிப்பதற்காக, கட்டிடத்தின் கீழ் தளத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை வைத்துள்ளனர். இந்த தொட்டியை 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, கழிவுநீரில் கலந்துள்ள தங்கத்தைப் பிரித்து எடுப்பர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்( 28), ரத்தினபுரியைச் சேர்ந்த ஏழுமலை (23), வேடப்பட்டியைச் சேர்ந்த கவுரிசங்கர் (21) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்கு ரூ.7 ஆயிரம் சம்பளம் பேசியுள்ளனர்.
முதலில் தொட்டியில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளனர்.
பின்னர், தொட்டிக்குள் சுமார் 2 அடி ஆழத்தில், தங்கத் துகள்கள் கலந்திருக்கும் சேற்றை எடுக்க கவுரிசங்கர், ஏழுமலை ஆகி யோர் தொட்டியில் இறங்கியுள்ளனர்.
அப்போது, தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கியதில் கவுரிசங்கர், ஏழுமலை ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர். நீண்டநேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராதாகிருஷ்ணன், தொட்டியில் எட்டிப் பார்த்தபோது இருவரும் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.
உடனே அவர் சப்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு இரவுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த, துடியலூர் ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார்(23) அங்கு வந்து, தொட்டியில் மயங்கிக் கிடந்தவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரையும் விஷ வாயு தாக்கி மயங்கினார்.
மீண்டும் ராதாகிருஷ்ணன் கூச்சலிடவே, நிறுவன ஊழியர்களும், அக்கம்பக்கத்தினரும் திரண்டனர்.தீயணைப்பு வீரர்கள், தொட்டியிலிருந்த 3 பேரையும் மீட்க முயன்றனர். எனினும், கவுரிசங்கர், ஏழுமலை ஆகியோர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூரியகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், தேங்கியிருந்த கழிவுநீரில் உற்பத்தியான ஹைட்ரஜன் சல்பைடு வாயு தாக்கியதில் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது. ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பட்டறை உரிமையாளர் ரவிசங்கரை கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் கே.அருள் கூறும்போது, ‘தொழிற்சாலைகள், உற்பத்திக் கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கழிவுகளை அகற்றும்போது வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.