ஒக்கி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்த திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் உட்பட 385 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி ‘ஒக்கி’ புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றபோதும், பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. புயல் சேதத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தேசிய பேரிடராக அறிவிக்காததையடுத்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.
சாலை மறியல்
இந்நிலையில், புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சேதமடைந்த ரப்பர், வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான உற்பத்திச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார், ஆஸ்டின், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட இருகட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். பகல் 12.20 மணிவரை சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
5 எம்எல்ஏக்கள் கைது
ஆர்டிஓ ஜானகி, டிஎஸ்பி கோபி உள்ளிட்டோர் அங்கு வந்து எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆட்சியர் நேரில் வந்து தங்களிடம் பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆட்சியர் மீனவ கிராமத்துக்கு சென்றிருப்பதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் டிஎஸ்பி தெரிவித்தார். இதன் பிறகும் மறியல் கைவிடப்படாததால் 5 எம்எல்ஏக்கள் மற்றும் 75 பெண்கள் உட்பட 385 பேரை போலீஸார் கைது செய்தனர்.