நடிகர் விஜய் நடித்திருந்த ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய், பிகில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 3 பேருக்கும் வருமானவரித் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் மூவரின் வீடு, அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமலாக்கத் துறையிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.