திருச்சி அருகே தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரமேஷ்(35). விவசாயியான இவர், ஊரிலிருந்து சற்று தொலைவில் வீடு கட்டி மனைவி லதாவுடன்(33) வசித்து வந்தார். கடந்த 23.4.2018-ம் தேதி இரவு ரமேஷூம், லதாவும் வீட்டின் வாசலில் படுத்திருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு நகைகள், பணம், இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இதில், கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 2 ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தததால், லால்குடி டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக வாலையூரைச் சேர்ந்த கண்ணன் மகன் பழனிசாமி(21), பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கிஷாந்த்(21) ஆகியோரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது ரமேஷ், லதா ஆகிய இருவரையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், கடந்த 2017-ல் முன்விரோதம் காரணமாக தனது சகோதரர் பெருமாளை(18) கிஷாந்துடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு எஸ்.பி ஜியாவுல்ஹக் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கினார்.
சிக்கியது எப்படி?
இதுகுறித்து போலீஸார் கூறியது:
இந்தக் கொலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், கொலை செய்தவர்கள் எடுத்துச் சென்ற இரு சக்கர வாகனம் தற்போது எங்கே உள்ளது என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டோம்.
அப்போது, கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் அந்த வாகனம் இருப்பதும், அதன் எண்ணை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக தமிழ் எழுத்துருக்களில் எண்கள் எழுதப்பட்டிருப்பதும், விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கிஷாந்திடமிருந்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கிஷாந்த்தை பிடித்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மேலும், தனக்கு வீட்டில் இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்தால், தனது நண்பரான பழனிசாமியுடன் சேர்ந்து ரமேஷ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தாகவும், அப்போது ரமேஷூம், லதாவும் விழித்துக் கொண்டதால் அவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றுவிட்டதாகவும், பின்னர் இந்த வாகனத்தை எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதால், நம்பர் பிளேட்டில் தமிழ் எண்களை எழுதி ஓட்டியதாகவும் கிஷாந்த் கூறினார்.
இதையடுத்து பழனிசாமியைப் பிடித்து விசாரித்தோம். அப்போது, சென்னையில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் பெருமாளிடம் பழனிசாமி அடிக்கடி பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததுடன் கோபமாக திட்டியதால் அவர் மீது பழனிசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின், பெருமாளை சென்னையிலிருந்து ஊருக்கு வரவழைத்த பழனிசாமி, தேவிமங்கலத்திலிருந்து மணியங்குறிச்சி செல்லும் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் கிஷாந்துடன் சேர்ந்து அவரை கொலை செய்து உடலை குளத்து தண்ணீருக்குள் போட்டு, கல்லைத் தூக்கி வைத்துவிட்டார். 5 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலம் மிதந்ததால் அடையாளம் காண முடியவில்லை. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அந்த வழக்கிலும் இருவரும் சிக்கிக் கொண்டனர் என்றார்.