Police Department News

சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்

சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!!
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்…!

டெல்லி: டெல்லியில், கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், சாக்கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல உடல்கள் இப்படி, கிடக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள்,சீக்கியர்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. வட கிழக்கு டெல்லி பகுதியில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களில் மட்டும் இந்த கலவரங்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மோசம்
வட கிழக்கு டெல்லியில்தான் கலவரம் ரொம்பவே அதிகம் நடைபெறுகிறது. சீலாம்பூர் உள்ளிட்ட பல முஸ்லீம் பெரும்பான்மை ஏரியாக்கள் இங்குதான் வருகிறது. வீடுகளுக்குள் இருப்பவர்களை வெளியே இழுத்துச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இங்கு பதிவாகியுள்ளன. இதில் இன்னார்தான் என்று இல்லை. பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.

உளவுத்துறை டிரைவர்
சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டார். இவர், மத்திய உளவுத்துறையில், டிரைவர் பணியில் இருந்தவர். இதையடுத்து சாக்கடை கால்வாய்களில் மேலும் பலர் கொன்று வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். கங்காவிகார் ஜோரிபூர் என்க்ஸ்டென்சன் பகுதியில், இவ்வாறு இரு சடலங்களை சாக்கடை கால்வாய்களுக்குள் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

உடல்கள்
இதேபோல தார் ஊற்றி வைக்க கூடிய சாலையோர டிரம்முக்குள் எரிந்த நிலையில், ஒரு சடலம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இப்படி யார் கண்ணிலும் படாமல் சடலங்கள் ஆங்காங்கு இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எனவே கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இயல்பு நிலை
தற்போது டெல்லியில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்று மாலை சம்பவ இடத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்ற பிறகு, நிலைமை எவ்வளவோ மேம்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், முற்றிலும் பதற்றம் இன்னும் குறையவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.