பொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு
தொலைபேசி வாயிலாக பேசி OTP எண்ணினை பெற்று ஆன்லைனில் மோசடி செய்த நபர் கைது
திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆர்.வி.இ நகர் பகுதியில் குடியிருந்து வரும் பெருமாள் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு முகம் தெரியாத நபர் SBI வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களது வங்கி கணக்கை ₹ 1,00,000 உயர்த்தி வழங்குவதாகவும் மேலும் பத்தாயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்குவதாகவும் கூறி கிரெடிட் கார்டின் 16 இலக்க எண் மற்றும் பின்புறம் உள்ள மூன்று இலக்க எண் OTP எண் ஆகியவற்றை பெற்றுள்ளார். பிறகு பெருமாள் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ₹ 32989 ரூபாய்க்கு பொருள் வாங்கியுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.மேற்படி நபர் உடனடியாக வங்கிக்கு சென்று மேலாளரிடம் தெரிவித்தார்.பிறகு அந்த நபரை யாரோ ஏமாற்றியது தெரிய வந்தது. உடனே பெருமாள் திருப்பூர் மாநகரில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரியை பிடிக்க மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் கண்காணிப்பில் காவல் உதவி ஆணையர் மத்திய குற்றப்பிரிவு திரு.சுந்தர்ராஜ் அவர்கள் மேற்பார்வையில் திரு.சந்திரமோகன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திருமதி.சொர்ணவள்ளி சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு புகார்தாரருக்கு வந்த தொலைபேசி எண்களை கொண்டு எதிரியை தேடிவந்தனர். இந்நிலையில் எதிரி புதிய பேருந்து நிலையம் அருகில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் எதிரி தினேஷ்(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 13 சிம் கார்டுகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேற்படி எதிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் எதிரி சென்னை கோயம்புத்தூர் மதுரை மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும் எதிரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்செயலை செய்த தனிப்படையினரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்