Police Department News

கடத்தல்காரர்கள் தாக்கியதில் போலீஸ் காவலர் காயம் சேஷாசலம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு: ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி வனப்பகுதியில் நேற்று அதிகாலைஅதிரடிப்படையினர் மீது செம்மர கடத்தல் கும்பல் கற்களாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். கடத்தல்காரர்களை விரட்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 32 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவாரி மெட்டு பகுதியில், தேவுன்னி குடி என்கிற இடத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 60 பேர் அடங்கிய கும்பல், செம்மரங்களை வெட்டி, கடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களை கண்ட அதிரடிப்படையினர், சரண் அடையும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், சரண் அடையாமல், கத்தி, கோடாலி மற்றும் கற்களால் அதிரடிப்படையினர் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஹரிகிருஷ்ணா காயமடைந்தார். இதனை தொடர்ந்து, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது. அங்கிருந்த 32 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர் என அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை ராவூரு, உதயகிரி, சோமசீலா ஆகிய பகுதிகளில் போலீஸாரும், அதிரடிப்படையினரும் தீவிர வாகன சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 554 கிலோ எடையுள்ள 33 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.5 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, 3 வாகனங்கள், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.