Police Department News

ஹவாலா மோசடி: ரூ.3 கோடி மதிப்புள்ள டாலர்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது

25 வயது ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கம் வைத்திருந்ததையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகளால் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்ற இந்தப் பணிப்பெண் திங்கள் காலை டெல்லியிலிருந்து புறப்படும் விமானத்தில் பணியாற்றி வந்த போது வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் திடீரென மேற்கொண்ட ரெய்டில் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கத்துடன் சிக்கினார். நிதிமுறைகெடு ஹவாலா மோசடிப் பேர்வழி ஒருவர் இவரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது தெரிய வர இந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹவாலா மோசடியில் இந்தப் பணிப்பெண் ஈடுபட்டு வருவதாக வருவாய் உளவுத்துறை அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்ததையடுத்து விமானத்தில் கைது செய்யப்பட்டார்.

திங்கள் அதிகாலை 2 மணியளவில் டெல்லியிலிருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது உளவுத்துறை அதிகாரிகள் விமானத்தினுள் நுழைந்து தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா பைகளைச் சோதனையிட்டனர். அப்போது சூட்கேஸ் ஒன்றில் ஷூக்கள், காஸ்மெடிக் சாமான்களுக்குக் கீழ் 100 டாலர் நோட்டுகள் ஒரு கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த கவர் எக்ஸ்-ரே கதிருக்கும் பெப்பே காட்டக்கூடியதாகும்.

பிற்பாடு இவரைக் கைது செய்து விசாரித்த போது கடந்த 2 மாதங்களில் 10 லட்சம் டாலர்களை கடத்தியுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு டிரிப்புக்கும் இவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதையும் ஒப்புக் கொண்டார். விசாரணையில் டெல்லியில் உள்ள ஹவாலா மோசடிப் பேர்வழி அமித் மல்ஹோத்ரா என்பவர் பெயரை தேவ்ஷி குறிப்பிட்டார்.

அமித் மல்ஹோத்ரா (40), டெல்லியில் உள்ள தங்கம், வெள்ளி வர்த்தகர்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏர்லைன் பணியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்லும் ஹவாலா பேர்வழியாவார். பிறகு இந்தப் பணம் தங்கம், வெள்ளி ரூபத்தில் மீண்டும் இந்தியாவுக்குள் வரும்.

இந்த பலே அமித் மல்ஹோத்ரா 6 மாதங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் ஊழியர் தேவ்ஷியுடன் நட்பு கொண்டுள்ளார். பணத்தாசைக் காட்டி தேவ்ஷியை ஹாங்காங்குக்கு டாலர்களைக் கடத்தும் சட்டவிரோதச் செயலில் ஈடுபடுத்தியுள்ளார். மல்ஹோத்ரா வீட்டை அதிகாரிகள் சோதனையிட்ட போது ரூ.3 லட்சம் வரை ரொக்கமும் 1,600 டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேவ்ஷி நன்கு பயிற்சிப் பெற்ற ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் ஆவார், 6 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸில் பணியாற்றி வந்தார். ஜெட் ஏர்வேசின் முன்னாள் சக ஊழியர் ஒருவரை ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் முடித்துள்ளார். தேவ்ஷி கணவரின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.