திண்டுக்கல்: கொடைக்கானல் நகரில் உள்ள கவி தியாகராஜர் சாலையில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பாக ரூ.57 லட்சம் செலவில் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியினை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கொடைக்கானல் நகரில் கட்டப்பட்டு வரும் காவல் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதில் 4 அறைகள் மற்றும் ஒரு உதவியாளர் அறை ஆகியவை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல்–பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வட்டக்கானல் பகுதியில் உள்ள காவல் சோதனைச்சாவடியை நவீனப்படுத்தவும், நகரில் உள்ள காவல் குடியிருப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கல்லுக்குழி பகுதியில் உள்ள இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் காவல் நிலையம் அமைக்கும் பணிக்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் அங்கு காவல் நிலையம் அமைக்கப்படும். அத்துடன் நகரில் போக்குவரத்தினை சீரமைக்க போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு டி.ஐ.ஜி.கார்த்திகேயன் கூறினார்.