சென்னையை அடுத்த போரூர் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு, பாரதியார் தெருவில் வசிப்பவர் சுந்தரசெல்வி(52), இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுந்தரசெல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலயில் இவருக்கு தீனதயாளன்(46) என்பவர் பழக்கமாகியுள்ளார். தன்னை வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார். இதில் அடிக்கடி சுந்தரசெல்வி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுந்தரசெல்வியின் வீட்டிற்கு வழக்கம்போல் தீனதயாளன் சென்றுள்ளார்.
வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளனர். அரைகுறை ஆடையில் இருந்த அவர்களை மிரட்டிய அவர்கள் தங்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறியுள்ளனர்.
பின்னர் சுந்தரசெல்வியை புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் அவரை கைது செய்யாமல் இருக்கவேண்டுமானால் அவரிடம் இருந்து 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை பிடுங்கி சென்று விட்டனர். பணம் நகை போனதை கெட்ட கனவாக நினைத்து சுந்தரசெல்வி மறந்து விட்டார்.
ஆனால் அந்த நபர்கள் அடிக்கடி சுந்தரசெல்விக்கு போன் செய்து ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதனால் சுந்தரசெல்வி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீஸார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் நூதன திட்டம் ஒன்றை சுந்தரசெல்வியிடம் கூறி அதன் படி போலீஸார் சொன்னபடி பணம் கேட்டு மிரட்டியவர்களிடம் போலீஸார் கூறியபடி கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் வாங்கி சென்ற செல்போனை தந்தால்தான் தனது மகளுக்கு போன் செய்து பணம் வாங்க முடியும் என்று போலீசார் சொன்னது போல் சுந்தரசெல்வி கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர்களும் கிண்டியில் வந்து செல்போனை வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு சுந்தரசெல்வி சென்றுள்ளார். போலீஸாரும் மறைவான இடத்தில் இருந்து கண்காணித்துள்ளனர். அப்போது செல்போனை கொடுக்க மறைந்திருந்த போலீஸார் அந்தப்பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.
அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவர் பெயர் நந்தினி என்பதும் மிரட்டி பணம் பறிக்க முக்கிய திட்டம் போட்டு கொடுத்ததே தீனதயாளன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். தீனதயாளனின் உண்மையான பெயர் தியாகராஜன் என்பதும் அவர் சுந்தரசெல்வியை ஏமாற்றி வந்துள்ளார்.
இதில் அந்த பெண் கூறியது போலீஸாரையே திடுக்கிட வைத்தது. சென்னையை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் தன்னை தீனதயாளன் என்று கூறி சுந்தரசெல்விடம் அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் சுந்தரசெல்வியிடம் பழகிய அவர் அவரிடம் அதிக பணம் புழங்குவதை பார்த்தபின் அவரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்று நினைத்துள்ளார்.
இதை அடுத்து தனது நண்பர்களை திரட்டி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். தனது நண்பர்கள் ராஜா(29), ஏழுமலை(32), அசோக்விக்டர்(32), நந்தினி(28), ஆகிய நான்கு பேரை தயார் செய்து விட்டு வீட்டிற்கு வெளியே அவர்களை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் தீனதயாளன் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருக்கும் போது அவர்கள் திடீரென்று உள்ளே வரவேண்டும் என்பதே திட்டம்.
திட்டமிட்டபடி மூன்று பேரும் உள்ளே சென்று சுந்தரசெல்வியை மிரட்டி பணம், நகை, செல்போனை மிரட்டி வாங்கி சென்று விட்டனர். யாரும் வீட்டிற்குள் வராமல் இருக்க நந்தினி காவலுக்கு நின்று கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து நந்தினி உட்பட அவரது கணவர் ராஜா(29), அசோக் விக்டர்(32), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை, வாகனம் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தீனதயாளன், ஏழுமலை ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.