டெல்லியில் இருந்து கடந்த 19-ம் தேதி புறப்பட்ட ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான உதவியாளராக பணிபுரியும் அருண்குமார் என்பவர், எச்ஏ 1 பெட்டியை சோதனை செய்துள்ளார்.
அப்போது அந்த பெட்டியில் உள்ள ‘ஜி’ கேபினில் 6 குண்டுகளுடன் கூடிய மேகசைன் பாக்ஸ் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேகசைன் பாக்ஸ் என்பது துப்பாக்கியில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியாகும்.
துப்பாக்கி குண்டுகளுடன் கூடிய மேகசைன் பாக்ஸை உடனடியாக சென்ட்ரல் ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் அருண்குமார் ஒப்படைத்தார். இதுபற்றி விசாரணையில் இறங்கிய ரயில்வே போலீஸார், அந்தப் பெட்டியில் பயணம் செய்தோரின் பட்டியலை ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கி குண்டுகள் கிடந்த ‘ஜி’ கேபினில் 4 பேர் பயணிக்க முடியும். அதில் பயணம் செய்தவர்களிடம் முதலில் விசாரணை நடக்கிறது.
ரயில் பெட்டியில் கிடந்தது உரிமம் பெற்ற துப்பாக்கியின் குண்டுகளா அல்லது கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பல் அதை தவறி விட்டுச் சென்று விட்டார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பயணிகளை பரிசோதிக்கும் முறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தையும் இது உணர்த்தி உள்ளது.