Police Department News

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம்

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம்

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை தமிழ்நாட்டை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்தினார். இதற்கான காரணம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

பொதுவாக காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்துகிறார்கள் என்றால், பெரும்பாலும் அது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தன்னை எதற்காக நிறுத்தினார்? என்பது தொடர்பான வீடியோ ஒன்றை பைக் ரைடர் ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார். இதற்கான காரணம் அனைவரது மனங்களையும் நெகிழ செய்துள்ளது.

AnnyArun என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பைக் ரைடர் புதுச்சேரியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் தமிழக காவல் துறை அதிகாரி ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். நீங்கள் கர்நாடகாவில் இருந்து வந்துள்ளீர்களா? என அந்த பைக் ரைடரை நோக்கி, காவல் துறை அதிகாரி கேட்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

இதற்கு அந்த பைக் ரைடர் ஆம் என பதில் அளித்தார். இதையடுத்து அதே சாலையில் முன்னால் ஒரு பேருந்து சென்று கொண்டுள்ளது என அந்த பைக் ரைடரிடம் காவலர் கூறினார். மேலும் அந்த பேருந்தில் சென்று கொண்டுள்ள மூதாட்டி ஒருவர் மருந்து பாட்டிலை தவற விட்டு விட்டதாகவும், பேருந்தை விரட்டி சென்று மருந்து பாட்டிலை அந்த மூதாட்டியிடம் ஒப்படைத்து விடுமாறும் அந்த பைக் ரைடரிடம் காவலர் கூறினார்.

இதன்பின் காவல் துறை அதிகாரியிடம் இருந்து மருந்து பாட்டிலை பெற்று கொண்ட அந்த பைக் ரைடர், வேகமாக சென்று பேருந்தை பிடித்தார். பேருந்து நிறுத்தப்பட்டவுடன், மருந்து பாட்டிலை தவற விட்ட மூதாட்டியிடம் அவர் முறையாக ஒப்படைத்தார். சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிக்கும், பைக் ரைடருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மனிதநேயம் இன்னும் மடியவில்லை என்கிற ரீதியில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் பைக் ரைடரின் சைகையை புரிந்து கொண்டு, பேருந்தை நிறுத்திய அதன் ஓட்டுனருக்கும் பலர் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடப்பதால், போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடாத வாகன ஓட்டிகளிடமும் காவல் துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்கள் இருக்கின்றன.

இன்னும் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு தண்டிக்காமல் விட்டு விடுவதாகவும் காவல் துறை அதிகாரிகள் மீது புகார்கள் உள்ளன. எனவேதான் காவல் துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தினாலே, வாகன ஓட்டிகளுக்கு பதற்றம் ஏற்பட்டு விடுகிறது.

அப்படி இருக்கையில் ஒரு நல்ல காரியத்திற்காக இந்த காவல் துறை அதிகாரி பைக்கை நிறுத்தியிருப்பதால், அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக வெளி மாநிலங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் சிக்கினால், காவல் துறையினர் குஷியாகி விடுகின்றனர். ஆனால் இந்த அதிகாரியோ மனித நேயத்துடன் நடந்து கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.