திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பழநி வந்தனர். மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 2004-ல் கருவறையில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நவபாஷாண சிலையை மறைத்து வைத்ததற்கு பக்தர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும் இந்த சிலை அகற்றப்பட்டது.
இந்நிலையில் சிலையை செய்வதற்கு வழங்கப்பட்ட தங்கம் முழுமையாக பயன்படுத்தப்படாமல் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கருணாகரன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஒரு எஸ்ஐ, தலைமைக்காவலர் ஆகியோர் நேற்று பழநி வந்தனர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், போலீஸார் தங்கியிருந்த பொதுப்பணித்துறை விடுதிக்குச் சென்றுபேசினார். பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைந்த பிறகு போலீஸ் விசாரணை தீவிரம் அடையும் எனத் தெரிகிறது.
பல ஆயிரம் கோடி மதிப்பு
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் எனும் சித்தரால் 9 மூலிகைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட நவபாஷாண சிலைக்கு வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று போலீஸார் கூறுகின்றனர். புதிய சிலை செய்ததில் நடந்த முறைகேடு மட்டுமின்றி, நவபாஷாண சிலையை கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.