காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், சின்னக்காஞ்சிபுரம் சித்திவினாயகர் கோவில் பூந்தோட்டம் பகுதியில் வசிப்பவர் முனியப்பன் வயது.58, இவர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டர். கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த முனியப்பன் அலுவலகத்தின் 2 வது மாடிக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணி மேற்கொள்ள சங்க துப்பரவு பணியாளர்கள் மாடிக்கு சென்ற போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவலை விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் ஆய்வாளர் திரு. சுந்தரராஜன்,சார்பு ஆய்வாளர் திரு. தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.