
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது – அரிவாள் பறிமுதல்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை.
விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் திருக்குமார் (21) என்பவர் விளாத்திக்குளத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு மேற்படி திருக்குமாரை இன்று கைது செய்து, அவரிடமிருந்து ஒரு பெரிய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி திருக்குமார் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் பெரிய அரிவாளை வைத்து மிரட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
