மதுரை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவும் மற்றும் காவலரின் பெண் குழந்தைகளுக்கு Technovation-2022 எனும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாகவும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் நேரும் துன்பங்கள் குறித்தும், சாலை விதிகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சாலை விதிமுறைகளை கடைபிடித்தல் என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் வெளியிட்டார்கள்.
மேலும் காவலரின் பெண் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரவும், அவரது திறமைகளை மீட்டெடுக்கவும் ஏதுவாக Technovation 2022 என்ற பயிற்சி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்கள்.
இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் காவலரின் பெண்குழந்தைகள் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும், அசாத்திய குணங்களையும் உலக அளவில் வெளிக் காட்டுவதற்கு இந்த Technovation -2022 பயிற்சியானது வழிகாட்டும். இதில் மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த காவலர்களின் பெண் குழந்தைகள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம் காவலரின் பெண் குழந்தைகள் தங்களுடைய திறமைகளை பட்டை தீட்டிக் கொள்வதற்கும் தங்களுடைய புத்திக் கூர்மையை கூறு இட்டுக் கொள்வதற்கும் உதவி செய்யும். இந்த பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வீடியோ வெளியீட்டு விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு விக்னேஸ்வரன் , வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திருமதி சித்ரா , திரு சிங்காரவேலு, திரு.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த குறும்படத்தை தயாரிப்பதற்கு உதவியாக இருந்த டாக்டர் பாலகுருசாமி அவர்களும் இந்த வீடியோ வெளியீட்டு விழாவின் போது உடன் இருந்தார்கள்.
மேலும் 2022 பயிற்சித் திட்ட துவக்க விழாவில் அதன் வடிவமைப்பாளர்கள் திரு தினேஷ் பாண்டியன் , திரு செந்தில்குமார் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
