
தர்மபுரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூறினார்.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றிய கலைச்செல்வன் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை குற்றப்புலனாய்வு தனி பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். இவர் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தர்மபுரி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் காவல்துறை மூலம் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சார்ந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்டத்தின் 53-வது காவல் கண்காணிப்பாளர் ஆவார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு துணை கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார். பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த இவர் கடந்த 2017-ம் காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
