Police Department News

ஜனாதிபதி 18-ந் தேதி மதுரை வருகை: மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ஜனாதிபதி 18-ந் தேதி மதுரை வருகை: மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை வருகிறார். கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி அன்று காலை 11.30 மணிக்கு மதுரை வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து காரில் பலத்த பாதுகாப்புடன் ரிங்ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மதியம் மதுரை வந்தனர். அவர்கள் 3 நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

மதுரை ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மாநகர் காவல் துணை ஆணையாளர் சாய் பிரனீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாய்த்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.