
மதுரை நகைக்கடையில் 10 பவுன் நகை திருடிய வாலிபர்- இளம்பெண் கைது
மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 13-ந்தேதி அந்த கடையில் இருப்பில் உள்ள நகைகளை மேலாளர் கார்த்திக் சரிபார்த்தபோது 10 பவுன் நகை குறைவாக இருந்தது.
இதனால் அந்த நகைகள் திருட்டு போனதா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தார். அதில், கீழ்த்தளத்தில் உள்ள செயின் கவுண்டரில் இருந்த 80 கிராம் எடையுள்ள தங்க செயினை கடையில் வேலை பார்த்த அப்துல் பயாஸ் என்பவர் எடுத்துச்சென்றது பதிவாகி இருந்தது.
அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த திருட்டு குறித்து கடை மேலாளர் கார்த்திக் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற திருச்சி தர்கா காலனியை சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் அப்துல் பயாசை கைது செய்தனர்.
மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அப்துல் பயாசின் தோழியான கோவையை சேர்ந்த திவ்யா(வயது29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

