
கள்ளக்காதல் விவகாரம்- மனைவியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவர் கைது
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டங்கா குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் ஷரவன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா.
இந்த நிலையில் ஷரவன் தனது மனைவி உஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலிகாரில் வசித்து வந்த உஷாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் உஷாவை ஷரவன் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி உள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஷரவனை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி உஷாவை கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை போட்டு கல்லை கட்டி யமுனை ஆற்றில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தனது மனைவிக்கும் கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அதனால் மனைவி உஷா தினமும் தன்னிடம் சண்டை போட்டதால் அவரை கொன்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
