
சென்னை தி.நகர் சுரங்கப்பாதையில் வாலிபரை வழிமறித்து தலையில் வெட்டி செல்போன் பறிப்பு
சென்னை தி. நகர் ஆர்.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். 40 வயது வாலிபரான இவர் நேற்று இரவு தி.நகர் எம்.எச் ரோடு இருசக்கர வாகன சுரங்கப்பாதை வழியாக மலர்க்கொடி என்பவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் இறங்கி வந்து முத்துக்குமாரிடம் செல்போனை தருமாரு கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முத்துக்குமாரின் தலையில் ஓங்கி வெட்டினர். இதில் அவர் அலறிதுடித்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் கொள்ளையர்கள் இருவரும் முத்துக்குமாரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிசென்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பாண்டி பஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த முத்துக்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தப்பி ஓடிய கொள்ளையர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
