
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் அசத்தல்! 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது- தமிழக அரசு
தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் 5 பேர் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது பெறும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கு இந்த விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 பேர் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான காந்தியடிகள் காவல் விருது பெறுவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விழுப்புரம் எஸ்பி சசாங்சாய், தென்சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காசி விஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அதேபோல் மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ பாண்டியன், ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ரங்கராஜன் ஆகியோருக்கு இந்த விருது என்பது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வான இந்த 5 பேருக்கும் 2024 குடியரசு தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் காந்தியடிகள் காவல் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
