
கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிய வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
மதுரை: கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் இடம் பெற்ற விவகாரத்தில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டுமென ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பண்ணசாமி கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஆடல் – பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆபாசமான முறையில் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது.
கடந்த ஏப். 1ல் நடந்த ஆடல் – பாடல் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக்குழுவினர் மிகவும் ஆபாசமான முறையில் ஆடைகளை அணிந்து கொண்டும், இரட்டை அர்த்தம் உள்ளிட்ட தகாத வார்த்தைகளையும் அதிகளவில் பயன்படுத்தினர். எனவே, ஐகோர்ட் கிளை நிபந்தனையை மீறி நடந்து கொண்ட ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கணபதி சுப்ரமணியன் ஆஜராகி, ‘‘பெண்களும், குழந்தைகளும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாச நடனங்கள் இடம் பெற்றது’’ எனக் கூறி அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிப் பதிவுகளை தாக்கல் செய்தார். புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்த நீதிபதி, ‘‘இவ்வளவு ஆபாசமாக நடந்த நிகழ்ச்சியை எப்படி அனுமதித்தீர்கள். மக்கள் வழிபாட்டிற்கான கோயில் திருவிழாவில் இதை எப்படி அனுமதிக்க முடியும்’’ என்றார்.
அரசு வக்கீல் அம்ஜத்கான் ஆஜராகி, ‘‘ஆபாச நடனம் மற்றும் பாடல்கள் இடம் பெற்றது தொடர்பாக அரசகுளத்தைச் சேர்ந்த பெரியகருப்பன், கண்ணன், முருகன், வேலுச்சாமி, மணி மற்றும் மார்நாடு ஆகியோர் மீது, ஆவியூர் போலீசார் ஆபாசமான செயல்கள் அல்லது பாடுதல் (294)(ஏ) மற்றும் கலகம் விளைவித்தல் (147) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு பதியபட்டுள்ளது. இது போதுமானதல்ல. பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வது தான் சரியாக இருக்கும். எனவே, உரிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23க்கு தள்ளி வைத்தார்.
