Police Department News

பார்சலுக்குத் தனிகட்டணம் பிரபல உணவத்துக்கு எதிராக வழக்கில் வென்ற இளைஞர்!

பார்சலுக்குத் தனிகட்டணம் பிரபல உணவத்துக்கு எதிராக வழக்கில் வென்ற இளைஞர்!

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ்  உணவகத்தில் ஃபிரைடு ரைஸ் வாங்கியிருக்கிறார்.

அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில், பார்சல் செய்து கொடுத்த கன்டய்னருக்கு ரூ.5.71 கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் கன்டய்னரில் அந்த உணவகத்தின் லோகோ இடம் பெற்றிருந்தது.

அவர்களது நிறுவனத்தின் லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாக பயன்படுத்தியதாக, சேக் முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், “ஆனந்தாஸ் நிறுவனம் உணவு பார்சல் கொடுக்கும் கன்டய்னரில் உணவகத்தின் லோகோவைப் பயன்படுத்தக் கூடாது.  மேலும் சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ,10,000 மற்றும்  வழக்கு செலவீனம் ரூ.5,000 வழங்க வேண்டும்.” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சேக் முகமது கூறுகையில், “நான் கோவை சட்டக்கல்லூரியில் படிப்பதால் வழியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்தில் பார்சல் வாங்குவேன். எங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 என்ற பாடம் இருக்கிறது. அதில் நுகர்வோர் எந்த மாதிரியான விவகாரங்களுக்கு நீதிமன்றம் செல்லலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக உணவுத்துறையில் பார்சல் கன்டெய்னர்களுக்கு கட்டணம் நிர்ணயித்தால் அதில் அவர்களின் லோகோ போடக்கூடாது.

சிலர் லோகோ போடுவதால் அதற்குக் கட்டணம் எதுவும் நியமிப்பதில்லை. அதேநேரத்தில் சிலர் கன்டெய்னர், பேக்கிங் மெட்டீரியல், பார்சல் சார்ஜ் என்று பில்லில் குறிப்பிட்டுக் கட்டணம் நிர்ணயிக்கின்றனர். அப்படித்தான் ஆனந்தாஸ் உணவகத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உணவு பார்சல் வாங்கியபோது கன்டெய்னரில் லோகோ போட்டு அதற்கு ரூ.5.71 தனிக்கட்டணம் வசூலித்தனர்.

அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு இதுப்பற்றித் தெரியாது.  எங்களிடம் கேட்காதீர்கள்.’ என்று பதிலளித்தனர். அவர்களின் மேலாளர் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு நான் அனுப்பிய நோட்டீஸ்க்கும் பதிலளிக்கவில்லை.

ஒரு மாதமாகியும் பதிலளிக்காததால் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். சட்டக்கல்லூரி மாணவன் என்பதால் நீதிமன்ற வழிமுறைகள் பற்றி எனக்கு தெரியும். Party in Person விதிப்படி நானே வழக்கை வாதாடியதால் போக்குவரத்து, காகிதங்கள் உள்ளிட்ட செலவு மட்டுமே ஆனது.

லோகோ போட்டிருந்தால் அதை இலவசமாகக் கொடுக்க வேண்டும். அதற்கும் விலை நிர்ணயித்து வாடிக்கையாளரின் பணத்தில் விளம்பரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்தேன். அவர்களின் பணத்தில் விளம்பரம் செய்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் நுகர்வோர் வாங்கும் ஒரு பொருளை பத்திரமாக பார்சல் செய்து கொடுப்பது என்பது அவர்களின் கடமை.

பார்சல் கன்டெய்னரில் அவர்களின் லோகோவை போட்டு, அதற்கு வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி விளம்பர ஏஜென்டாக  பயன்படுத்துவது தவறான செயல். வாடிக்கையாளர்களின் பணத்தில் விளம்பரம் தேடுவதில் எந்த நியாயமும் இல்லை’ என்று வாதாடினேன்.

அதனடிப்படையில், ‘இனிமேல் கன்டெய்னர்களில் லோகோ போட்டால் பணம் வாங்கக் கூடாது.’ என்றுசொல்லி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மால் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல நிறுவனங்கள் கவர்களில் லோகோ போட்டு தங்களை விளம்பர ஏஜென்டாக பயன்படுகிறார்கள் என்று வழக்கு உள்ளது. இதை உணவுத்துறை பார்சலுக்கும் வழக்கமாக்கிவிட்டனர். 

சில உணவகங்கள் 4 இட்லி வாங்கினால் கூட, அதை 2 டப்பாக்களில்  போட்டு 2க்கும் தலா ரூ.3 கட்டணம் வசூலிக்கின்றனர். சமீபகாலமாக கன்டெய்னரை தவிர்த்து பேப்பர் பாக்ஸில் பார்சல் செய்து, அதிலும் லோகோவை போட்டு, தனிக்கட்டணம் நிர்ணயிக்கின்றனர். கன்டெய்னர் கூட மக்கள் வேறு பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம். இது எந்த வகையிலும் பயனளிக்காது.

உணவை வெறும் கையில் எடுத்து செல்ல முடியாது. ஜிஎஸ்டி வரியில் பார்சலுக்கும் சேர்த்துதான் வரி செலுத்துகிறோம். நியாயப்படி பார்சல் கட்டணமே வாங்கக் கூடாது. அதற்கான கட்டணத்தையும் நுகர்வோர் மீது திணிப்பதில் துளியும் நியாயம் இல்லை. சில நிறுவனங்கள் இதுபோன்ற நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளாமல் இப்போதும் தவறை தொடர்கிறார்கள். இதற்கு மக்களே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்.

பலர்  3 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்காகவும் எதற்கு கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் நம்மை யார் கேட்க போகிறார்கள் என்ற மனப்பான்மையை பெரு நிறுவனங்களுக்கு வழங்குகிறது.இது மறைமுகமாக நம்மிடம் திருடும் யுக்தி. மக்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பத் தொடங்கினால் இந்த நிலையை ஓரளவுக்கு மாற்றலாம்.

வழக்கு போடுவது மிகவும் எளிது. இந்த வழக்கு ஓராண்டு சென்றதற்கு உணவக நிறுவனம் ஒரு காரணம். அவர்கள் சில விசாரணைக்கு நீதிமன்றம் வரவில்லை. இல்லையென்றால் 6 மாதங்களில் வழக்கு =முடிந்திருக்கும். சட்டத்தை பற்றிய அடிப்படை மற்றும் வழக்கு பிரிவுகள் தெரிந்திருந்தால் வழக்குக்கு நாமே வாதாடலாம்.

நீதிபதியே நமக்கு தமிழில் தகவல் பரிமாற்றம் செய்ய சொல்வார். இதுபோன்ற பிரச்னைகளில் நுகர்வோர் நீதிமன்றம் நமக்கு பக்க பலமாக நிற்கும். மக்கள் தான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நோட்டீஸ் வழங்கியதாவது விளக்கம் கேட்கலாம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.