புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல்
மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நேற்று திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது.
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்),
காவல் துறையிடம் இணையவழியில் புகாா்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய நவீன நீதி அமைப்பை இந்தப் புதிய சட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
இதில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை மூலம், ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றதோ, அந்த இடத்தின் காவல் நிலையம் மட்டுமில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும். இதேபோல அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் சட்டங்களின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலத்தை அவா்களின் பாதுகாவலா்கள் முன்னிலையில் பெண் காவல் துறை அதிகாரி பெறுவாா். அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், குழந்தை விற்பனை கொடிய குற்றமாக்கப்பட்டு, 18 வயதுக்குள்பட்ட சிறாரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள 3 சட்டங்களும் நேற்று (திங்கள்கிழமை) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.