Police Recruitment

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு

நாடு முழுதும், மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், ஹாசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதாவது, ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்’ ஆகிய மூன்று சட்டங்களும் நேற்று முதல், நாடு முழுதும் அமலுக்கு வந்தன.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, ஹாசன் மாவட்டம், ஹலேபீடுவை நோக்கி இந்துமதி, வயது 67, அவரது கணவர் யோகீஷ், வயது 70, ஆகியோர் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சீகேகேட் என்ற பகுதியில், மேம்பாலத்தின் மீது இருந்து கார் விழுந்தது. இதில், இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவரது கணவரும், கார் ஓட்டுனரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இறந்தவரின் மருமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பி.என்.எஸ்., எனும் ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என்ற புதிய சட்டத்தின், 281, 106 பிரிவுகளின் கீழ், ஹாசன் ரூரல் போலீஸ் நிலையத்தில், நேற்று காலை 9:15 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ்,கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு இதுவாகும்.

அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் சாகர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. தம்பதி காசி யாத்திரை முடித்து, வீடு திரும்பி கொண்டிருந்த போது, விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:

மூன்று புதிய சட்டங்களும் அமலுக்கு வந்துள்ளன. சட்டங்கள் அமல்படுத்த, ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இனி பதிவாகும் அனைத்து வழக்குகளும், புதிய சட்டங்களின்படி பதிவு செய்யப்படும்.

சில நாட்கள் கழித்த பின்னர் தான், இதன் சாதக, பாதங்கள் தெரியும். புதிய சட்டங்கள் குறித்து, ஏட்டு முதல், உயர் அதிகாரிகள் வரை ஏற்கனவே போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.