மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல்
மதுரையில் பைபாஸ் சாலை, குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.
ஆரப்பாளையத்தில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திபில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலது புறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள U வளைவில் திரும்பி குரு தியேட்டர் சிக்னல் வந்து நேராக வழக்கம் போல் செல்லலாம்.
காளவாசலில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திப்பினை கடந்து 70 மீட்டர் தொலைவில் வலதுறம் புதிதாக ஏற்படுத்தியுள்ள U வளைவில் திரும்பி குரு தியேட்டர் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி வழக்கம் போல் செல்லலாம்.
காளவாசல் சந்திப்பில் இருந்து பாத்திமா கல்லூரி நோக்கி அணுகு சாலை மற்றும் பழங்காநத்தத்தில் இருந்து பாத்திமா கல்லூரி நோக்கி செல்லும் காளவாசல் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பழங்காநத்தம் நோக்கி செல்ல வேண்டி இருப்பின் 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள U வளைவில் திரும்பி பெரியார் நிலையம் மற்றும் பழங்காநத்தம் நோக்கி வழக்கம் போல் செல்லலாம்
ஏற்கனவே குரு தியேட்டர் சிக்னல் செயல்பட்டு வந்த இடத்தில் பாதசாரிகள் சாலையை கடக்க அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதசாரிகளுக்கான சிக்னல் குறியீடு வரும்போதும், காவலர்களின் வழிகட்டுதலின்படியும் மிகுந்த கவனத்துடன் சாலையை கடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி போக்குவரத்து மாற்றமானது மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினரால் ட்ரோன் கேமராவின் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபார பெருமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் இந்த தற்காலிகமாக நடைபெற்று வரும் சோதனை முறையிலான போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட மதுரை மாநகர் காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.