புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் பெரியாரின் முழு உருவச் சிலை நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
புதுக்கோட்டை விடுதியில் அரசு தொடக்கப் பள்ளி அருகே திராவிடர் கழகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் படிப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அருகே 2013-ல் சுமார் ஏழரை அடி உயரத்தில் பெரியாரின் முழு உருவ சிமென்ட் சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு பெரியார் சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்தி, தலையை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்து நேற்று காலை அங்கு வந்த திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஊர்வலமாகச் சென்று வடகாடு முக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பூபதி கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில், உடைந்த சிலையில் சிமென்ட் பூசி தலைப்பகுதி வைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.
சங்கர மடத்தின் மீது கல்வீச்சு
இந்நிலையில், சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று கல்வீச்சில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்தனர். சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் நங்கவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜேந்திரன், மனோஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.