Police Department News

விடிய விடிய நடந்த வேட்டை.. 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.!

விடிய விடிய நடந்த வேட்டை..
2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.!

தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அண்மைக் காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் சற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

ரவுடிகளை கைது செய்ய 48 மணி நேர வேட்டையை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ரவுடிகள் வேட்டையில் தமிழக காவல்துறையினர் களமிறங்கினர்.

சென்னையில் தான் முதன் முதலில் வேட்டை தொடங்கியது.

விடிய விடிய நடந்த வேட்டையில் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள், வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 350 அரிவாள்கள், கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, ஏ பி சி டி என 4 வகையாக பிரிக்கப்பட்டு ரவுடிகளை சுற்றி வளைத்து வருகின்றனர், மாநிலத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் பாயும்,பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க டிஜிபியின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.