Police Recruitment

தமிழக பெண்ணாக கருதி விசாரணை நடத்தி வருகிறோம் : காவல் ஆணையர் உறுதி அளித்ததாக பாத்திமாவின் தந்தை பேட்டி

ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் விசாரணை நடத்தினார். ‘எங்கள் தமிழக பெண்ணாக கருதி’ நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் தன்னிடம் உறுதியளித்ததாக பாத்திமாவின் தந்தை தெரிவித்தார்.

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு அவரது தந்தை அப்துல் லத்தீஃப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரைச் சந்தித்தார். இன்று காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

தனது மகள் மரணம் குறித்த விசாரணை முடியும் வரை சென்னையிலேயே தங்கியிருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள சமாஜத்தில் அவர் தங்கியுள்ளார். ஏற்கெனவே மாணவி மரணம் குறித்த விவகாரத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

வழக்கு சிபிஐயிடம் இருந்து தற்போது மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி வசம் ஒப்படைப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மெகலினா இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலினா உள்ளிட்டோர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தங்கியுள்ள கேரள சமாஜத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

காலை 8 மணிக்குச் சென்ற அவர்கள் 3 மணி நேரம் மாணவியின் தந்தை, தங்கை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய பின்னர் 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். விசாரணையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டதாகவும், பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும், பாத்திமா பயன்படுத்திய டைரியையும் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை போலீஸார் கேட்ட அடிப்படையில் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின்னர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து அப்துல் லத்தீஃப் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் , “காவல் ஆணையர் எனது புகாரை படித்து தான் சொன்னதை முழுவதுமாக கவனமாக கேட்டார், என் கைகளைப்பிடித்துக்கொண்ட ஆணையர் பாத்திமாவை இங்குள்ள தமிழக பெண்ணாக கருதி விசாரணை நடத்தி வருகிறோம், அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த வழக்கு தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்பு கேரள டி.ஜி.பி, என்னை தொடர்பு கொண்டு பேசினார், தமிழக டி.ஜி.பி யும் இந்த வழக்கை விரைவாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என காவல் ஆணையர் தெரிவித்தார்”. என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.