கோவை பீளமேடு சவுரிபாளை யம் சாலையை சேர்ந்தவர் அமிர்தம் (55). இவரது மகள் கீதாமணி(30), கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் மற்றும் மகள் ரஞ்சனி(3)யுடன், மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம், அமிர்தம், கீதாமணி, ரஞ்சனி ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாய மாகியிருந்தது. அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்ப வம் தொடர்பாக, ஆதாயக் கொலை வழக்குப்பதிந்து பீளமேடு குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து கைரேகையை பதிவு செய்த காவல்துறையினர், நகம், மிளகாய் பொடி பாக்கெட் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். 150-க் கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. கோவை மாநகர காவல்துறையில், குற்றப் பிரிவு துணை ஆணையராக உமா சமீபத்தில் பதவியேற்றார். அவரது கவனத்துக்கு இந்த வழக்கு தொடர் பான விவரம் எடுத்துச் செல்லப்பட் டது. இதை தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து துணை ஆணையர் உமா கூறும்போது, ‘‘சவுரிபாளை யம் அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள தகவல் தற்போதுதான் எனக்கு தெரியவந்தது. இந்த சம்ப வம் தொடர்பாக, ‘கேஸ் டைரியை’ முழுமையாக படித்து, மீண்டும் விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.