பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை புளியந்தோப்பு போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. கூலிப்படை தலைவ னாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சுரேஷை புளியந்தோப்பு போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியே வந்த அவர் மற்ற வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவரை பிடிக்க வட சென்னை காவல் கூடுதல் ஆணை யர் ஆர்.தினகரன் உத்தரவிட்டார். அதன்படி, புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்தனர். தன்னை தேடுவதை அறிந்த அவர், அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை காரில் சென்னை வந்தார். புளியந்தோப்பில் உள்ள கன்னிகாபுரம், மாநகராட்சி மைதானம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது தப்பிக்க முயன்றவரை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 2 பட்டாக் கத்திகள், 3 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த அவரது கூட்டாளிகளான புளியந்தோப்பு ராஜேஷ் என்ற ஆங்கிள் ராஜேஷ் (36), அதே பகுதியைச் சேர்ந்த அமீர் (30) ஆகி யோரும் கைது செய்யப்பட்டுள் ளனர். பின்னர், நீதிமன்ற காவலில் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷ் ஏற்கெனவே, 15 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.