Police Department News

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை கமிஷனர்கள் தங்கதுரை(தெற்கு), ராஜசேகர்(வடக்கு) மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் முத்துராஜ் (மீனாட்சிகோவில்), சூரக்குமார் (அண்ணா நகர்) ஆலோசனை பெயரில் இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டியன் (கே.புதூர்), தமிழ்ச்செல்வன் (தெப்பகுளம்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கே.புதூர் போலீசார் நேற்று இரவு சர்வேயர் காலனி 120அடி ரோடு பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது ஆடம்பர காரில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில், 47 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் காரில் கஞ்சா கடத்தியது எல்லீஸ் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கேரளாவை சேர்ந்த ஒருவர் மூலம் 47 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, மதுரை எல்லீஸ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்குமாரை கே.புதூர் போலீசார் கைது செய்தனர்.

மதுரை காமராஜர் சாலை புரோட்டா கடையில் கஞ்சா விற்கப்படுவதாக தெப்பகுளம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் அதிரடி சோதனை நடத்தி குறிப்பிட்ட புரோட்டா கடையில் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் நாகமுருகனை (24) போலீசார் கைது செய்தனர்.

மேலும் அதே பகுதியில் கஞ்சா விற்றதாக செல்லூர் இந்திரா நகர் குருபிரபு (24), காமராஜர் சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெரு பிரதீப் (21), இஸ்மாயில்புரம் முகமது அசாருதீன் (22), தமிழன் தெரு பாலச்சந்துரு (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது கஞ்சா விற்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.