மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு
மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பல்வேறு பகுதிகளில் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.
மதுரையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செல்லூர், கூடல் புதூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கே.வி சாலை தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட உதவி கமிஷனர் விஜயகுமார் பேசும்போது, “குடிபோதையில் வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
நீங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தாரக மந்திரத்தை போதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து அவர்களை காப்பாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க சொல்லுங்கள். இதனால் குடும்பம் பாதுகாக்கப்படும். சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தடுக்கலாம். தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும் என்றார்.
மதுரை மாநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதேபோன்று விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இதில் செல்லூர் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம் (சட்டம்- ஒழுங்கு), வேதவள்ளி (குற்றப்பிரிவு) கூடல்புதூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வசந்தா, சப் இன்ஸ்பெக்டர் ரீகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகரில் செல்லூர், கூடல்புதூர் மட்டுமின்றி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.