மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
அவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.
மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். செல்லூர் காந்தி பொட்டல் அருகே 4 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு பதுங்கி இருந்த 4 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் செல்லூர், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25), சுயராஜ்யபுரம் தெரு ராஜேந்திரன் மகன் சஞ்சீவ்குமார் (24), கீழத்தோப்பு தங்கம் மகன் வேலாயுதம் (21), கே.வி.சாலை, பாரதிதாசன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.அதே போல மதிச்சியம், செனாய் நகர், ஜெகஜீவன் ராம் தெருவில் 18 வயது சிறுவன் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டான். வைகை வடகரை தியேட்டர் அருகில் கஞ்சா வைத்திருந்த ஆசாரி தோப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் பிடிபட்டான். மதிச்சியம் ஆர்.ஆர். மண்டபம், டீக்கடை அருகே கஞ்சா விற்ற, மேளக்கார தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகரில் நேற்று மட்டும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேரை கஞ்சா விற்றதாக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.