காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தை நடத்தினர். அவர்கள் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.
மேலும் பரீட்சையில் தோல்வி அடைந்த வர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்துள்ளனர் என்ற புகார்கள் வெளியானது.
இதையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அப்போதைய கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ராஜராஜன், சூப்பிரண்டுகள் சத்தியமூர்த்தி, ராஜ பாண்டி, பல்கலைக்கழக அதிகாரி கார்த்திகை செல்வன், கேரள மாநிலம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த கல்வியாளர் ஜிஜி, மலப்புரம் தொலைதூரக் கல்வி வளாகத்தைச் சேர்ந்த அப்துல்அஜீஸ், ஏ.கே சுரேஷ், திருச்சூர் கல்லூரி உயர்நிலை நிறுவன பொறுப்பாளர் ஜெயபிரகாசம் ஆகிய 8 பேர் மீது மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்தார்.
இவர்களில் ராஜராஜன் பணியில் இருந்த போதே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அதன் பிறகு இறந்து விட்டார் என்பதால் மற்ற 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.