வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 3 குற்றவாளிகள் கைது .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேஷ் இவர் கடந்த 1ம்தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டினுள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 1 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தோடு, செயின், மூக்குத்தி, வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை திருடி சென்றனர்.
மாலை வேலை முடித்து வீட்டிற்க்கு திரும்பி வந்த மாதேஷ் வீடு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார், இது குறித்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் கைரேகை மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து சந்தேகபடும்படியான நபர்களை பிடித்து விசாரித்து வந்த நிலையில் அமானிமல்லாபுரம் கீழ் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் சபரி (30), அதே ஊரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அரவிந்த் (22),கடத்தி கொள்மேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (எ) காட்டு ராஜா (29) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் தாங்கள் தான் திருடியதாக குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
மேலும் மாரண்டஅள்ளி அருகே பெல்லு அள்ளி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (70) என்பவரது வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி 5 பவுன் தங்க சங்கிலி திருடி சென்றதும் இவர்கள் தான் என தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து 1 இலட்சம் ரூபாய் பணமும் 1 பவுன் நகையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.